VVS AIYAR- THE FORGOTTEN ICON PART-1 (WILL BE TRANSLATED SOON IN ENGLISH)

அன்பான நண்பர்களே!!

இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஒரு பொன்னாள். இன்றைய இளைய தலைமுறை பலருக்குத் தெரியாத ஒரு உன்னதமான மனிதரின் பிறந்தநாள். அவர் தான் வரஹனேரி வேங்கடேச சுப்ரமணியம் ஐயர் (வ. வே.சு ஐயர்) அவர்கள்.

முதலில் அந்த மகானைப்  பற்றி எழுத வாய்ப்பு அமைந்தமைக்கு நான் இறைவனுக்கு நன்றியுரைக்கிறேன். நம் நாட்டுக்காக, நம்  நாட்டிலுள்ளோர் விடுதலைக்காக பாடுபட்ட தன்னலமில்லா தமிழர். தேச விடுதலைக்காக உழைத்த எண்ணற்ற தியாகிகளை நாம் நினைவு கொண்டாலும் வ. வே.சு ஐயரின் தியாகமும் அவரது சுதந்திர வேட்கையும் நம்மில் பலருக்குத் தெரியாமலிருப்பது என் மனதை வேதனையடையச் செய்கிறது. அவரைப் குறித்து எழுத இக்கட்டுரை போதாதெனினும் இருளில் ஒரு மின்மினிப்பூச்சித் தரக்கூடிய அளவேனும் அவர் குறித்து ஒளியைத் தருவது என் தலையாயப் பணியாகும்.

ஒரு சமயம் கல்லூரி நூலகத்தில் திருக்குறள் ஆங்கில மொழிப் பெயர்ப்பு புத்தகம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. முதலில் ஆர்வமில்லாமல் எடுத்து படித்தேன். நான் படித்த முதல் அதிகாரம் நட்பு. அதிலுள்ள ஒவ்வொரு குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், எளிதில் விளங்கும் வண்ணம் இருந்தது. ஆம், அது வ. வே.சு ஐயர் அவ்ரகளின் மொழிபெயர்ப்பே. திருக்குறளை வள்ளுவரைக் காட்டிலும் வ. வே.சு ஐயர் அவர்கள் அனுபவித்து எழுதியது போன்று உணர்ந்தேன். இன்றும் என் வீட்டிலுள்ள நூலகத்தில் அந்த நூலுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவர் மொழிபெயர்த்த கம்பராமாயணத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன்.



வரஹனேரி வேங்கடேச சுப்ரமணியம் ஐயர் (வ. வே.சு ஐயர்) அவர்கள் 1881ம் ஆண்டு ஏப்ரல் 2 ம் நாள் திருச்சியை அடுத்த வரஹனேரியில் பிறந்தார். திருச்சியின்  செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எ பட்டம் பெற்றப் பின் மதராஸ் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் வழக்கறிஞராக  சிறிது காலம் பணியாற்றி பின்னர் 1907 ம் ஆண்டு லண்டனில் பாரிஸ்டர் பட்டப்படிப்புப் பயின்றார். அங்கு இந்தியா ஹவுசில் தாமோதர சாவர்க்கரை சந்தித்தார். இது அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அங்கு பிகாஜி காமா, ஹர் தயாள் போன்ற தேசிய புரட்சி யாளர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு விடுதலை வேட்கை  வ. வே.சு ஐயர் அவரக்ளின் மனதில் சுடர் விட்டது.  1910 ம் ஆண்டு அவர் பயின்ற லின்க்கன்ஸ் இன் சொசைட்டியிலிருந்து ராஜினாமா செய்தார். அவரது செயல்பாடுகள் அறிந்த பிரிட்டிஷ் சர்க்கார், ஐயர் அவர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஐயர் அவர்கள் பாரிஸ் சென்றார். பின் அங்கிருந்து இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட பாண்டிச்சேரி தஞ்சம் புகுந்தார். அங்கு சுப்பிரமணிய பாரதியையும், அரவிந்தரையும் சந்தித்தார். முதலாம் உலகப்போர் முடியும் வரை சுமார் 10 வருடங்கள் பாண்டிச்சேரியில் வாசம் செய்தார். இந்த சமயத்தில் தான் திருக்குறளை ஆங்கிலத்தில் ஐயர் அவர்கள் மொழிபெயர்த்தார்.

வ. வே.சு ஐயர் அவர்கள் திருக்குறளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தமைக்கு ஒரு முக்கியக்  காரணம் உண்டு. அது பின் வருமாறு:

முதலாம் உலகப்போரின் போது ஜெர்மன் போர்க்கப்பல் எம்டன், சென்னை துறைமுகத்தில் நுழைந்து குண்டுவீச்சில் ஈடுபட்டது. அந்த சமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் பாண்டிச்சேரியில் புலம் பெயர்ந்தவர்களே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி ஐயர் அவர்களையும் அவரது ஆதரவாளர்களையும் அப்பிரிக்காவிற்கு நாடு கடத்த பிரெஞ்சு அரசாங்கத்தை வலியுறுத்தியது. இது ஒரு புறமிருக்க புலம்பெயர்ந்தவர்களுக்கு  எதிராக பிரெஞ்சு போலீசார்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். புலம் பெயர்ந்தவர்களுள் ஒருவர் தான் வ. வே.சு ஐயர் அவர்கள். பிரெஞ்சு அரசின் முயற்சிகள் பலனளிக்காவிடிலும் அதன் கவர்னர் புலம் பெயர்ந்தவர்களை அல்ஜீரிய நாட்டிற்கு நாடுகடத்த திண்ணமாக இருந்தார். ஆயின் அந்த விவகாரத்தில் நேரடியாக தலையிடாமல் தூதுவர்களை அனுப்பி மிரட்டி வந்தார். இந்த பேச்சுவார்த்தை நான்கைந்து மாதங்கள்  தொடர்ந்தன.

இதே நேரம் ஐயர் அவர்களின் மாணாக்கர்களுள் ஒருவரான வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்  வில்லியம் ஆஷ்  என்பவரை சுட்டுக் கொன்றார்.

 இந்த தருணத்தில் பிரெஞ்சு அரசாங்கம் தன்னை எந்த நேரத்திலும் பாண்டிச்சேரியை விட்டு விரட்டி விடுவர் என்றுணர்ந்த ஐயர் தான் மிகவும் நேசிக்கும் தமிழ் மண்ணை விட்டு தன் உடலை அப்புறப்படுத்தினாலும் நாட்டு மக்களுக்கு தன்னுடைய நினைவாக ஏதேனும் தொண்டாற்றி விட வேண்டும் என்று எண்ணினார்.

தான் பாண்டிச்சேரியில் இருக்கப்போவது நிச்சயமற்ற சிறிது காலமே ஆகையால் இத்தகைய சூழ்நிலையில் தான் என்ன முடியும் என்று எண்ணினார் ஐயர் அவர்கள். உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திண்ணம் கொண்டார். இவ்வாறு செய்வதால் தன்னுடைய நாட்டு மக்களின் மனதில் என்றும் ஓர் சிறிய இடம் கிடைக்கும் என்று நினைத்தார். நவம்பர் 1, 1914 ம் ஆண்டு திருக்குறள் மொழிபெயர்ப்பை தொடங்கினார் ஐயர் அவர்கள். விரைந்து திருக்குறள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். அடுத்த நாள் எழுத முடியுமா என்பது கேள்விக்குரியனதும்  தன்னை பாண்டிச்சேரியை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்ற உந்துதலாலும்  எவ்வளவு விரைந்து எழுத முடியுமோ அவ்வளவு குறள்களை மொழிபெயர்த்தார். தான் தங்கியிருந்த வீட்டில் யாரேனும் தப்பியோடிய கைதிகள் உள்ளனரா என்று  பிரெஞ்சு போலீஸ் சோதனையிட்ட போது கூட மொழிபெயர்ப்பில் தீவரமாக ஈடுபட்டிருந்தார். 1915 மார்ச் 1ம் தேதி வ. வே.சு ஐயர் பல்வேறு இன்னல்களுக்கிடையே திருக்குறள் மொழிபெயர்ப்பை செவ்வெனே எழுதி முடித்தார்.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஐயர் அவர்கள் சென்னை திரும்பி ''தேசபக்தன்'' பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் அரசால் ராஜதுரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு 9 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார். சிறையிலிருந்த பொது ஐயர் அவர்கள் எழுதிய தலைச்சிறந்த படைப்பே கம்ப ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு.

1925ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் பாபநாசம் நீர்வீழ்ச்சியில் ஐயர் அவர்கள் சர்ச்சைக்குரிய முறையில் இறந்தார் (நீரில் மூழ்கிய தன் மகள் சுபத்திரையை காப்பாற்ற சென்ற போது தானும் மூழ்கி இறந்தார் என்பர்).

வ. வே.சு ஐயரின் நண்பரான தாமோதர சர்க்கார் ''மஹாரதா'' என்ற பத்திரிக்கையில் தனக்கும் ஐயர் அவர்களுக்கும் இடையேயான நட்பைத் பற்றிக் கூறி அஞ்சலி செலுத்துகிறார். அதையும், ஐயர் அவர்களின் சிறுகதை பங்களிப்பையும் அடுத்த பாகத்தில் காண்போம்.

வாழ்க வ. வே.சு ஐயர் புகழ் இவ்வையம் உள்ளவரை!!

அன்புடன்
எம் ஜே.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

How much do you really know about Tamilnadu? 5 Interesting facts

Spoon River Anthology by Edgar Lee Masters